சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்

சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்

இன்றைக்கு நாம் பேசக்கூடிய தலைப்பு என்னவென்றால் ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள், அதனடிப்படையில் உடல்நலம் பெறக்கூடிய முறைகளைப் பற்றி நாம் பேசப்போகிறோம்.சித்தர்கள் உடம்பே ஆலயம் என்று சொல்லுவார்கள். நம்முடைய உடம்புதான் மிகச்சிறந்த ஆலயம் என்பது சித்தர்களுடைய கூற்று. அதனால்தான் திருமூலர்பாடலில் சொல்லுவார்..“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”  என்று சொல்லுவார். உடம்புதான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆலயம். அதையே சித்தர்கள் இன்னொரு பாட்டில் என்ன சொல்வார்கள் என்றால்,“நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?” என்று சொல்லுவார்கள்.நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே அதாவது நம்மை படைத்தது இறைவன்தான். நம் உடலில் இருந்து எல்லாவற்றையும் இயக்கக்கூடியது இறைசக்திதான். ஆக “உயிரே கடவுள்” என்ற உன்னத கோட்பாட்டை உணர்ந்து உடலை மேம்படுத்தக்கூடிய விசயங்களை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் பாடலின் கருத்து. என்னதான் சுவையாக செய்யப்பட்ட கறியாக இருந்தாலும் கூட அந்த கறியின் சுவையை நாம் சமைத்த மண்சட்டி அறியுமோ? என்ற பாடலில் கருத்து வைப்பார்கள். அந்த அளவிற்கு உயிரே கடவுள், உயிர் குடிகொண்டிருக்கும் உடம்பே ஆலயம் என்பது ஞானியர்கள் கூற்று.உடலை எப்படி பேணிப் பாதுகாக்கிறோம் என்றால் சில நேரங்களில் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். ஏனென்றால் சாப்பிடக்கூடிய உணவுகளில் நாம் உணவு என்ற அடிப்படையில் எந்த உணவையும் சுவைப்பதில்லை. ருசி அடிப்படையில் சுவைக்கக்கூடிய ஒரு இயல்பு இருப்பதனால் இந்த உடம்பு மெல்ல மெல்ல அழியக்கூடிய ஒரு சூழலுக்கு உள்ளாகிறது. ஒவ்வொரு மனிதனுடைய சராசரி ஆயுள் என்று நம்முடைய சித்தர்களின் நூல் என்னசொல்கிறது என்றால், குறைந்த பட்சம் 120 ஆண்டுகள் நோயில்லாமல் வாழக்கூடிய தன்மை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ஆனால் அந்த 120 ஆண்டுகளில் பாதியைக்கூட கடப்பதற்கு நம்மால் இயலாத சூழல் இன்றைக்கு இருக்கிறது.அதற்குக் காரணம் என்னவென்றால் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பொருட்களை நாம் முழுமையாக மறந்துவிட்டது, வணிக நோக்கில் நம்மீது திணிக்கப்பட்ட பன்னாட்டு உணவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டது, நாகரிக நோக்கத்தில் நம்முடைய பாரம்பரிய உணவு அறிவியலை முழுமையாக மறந்தது, நம்முடைய பாரம்பரிய பழக்கவழக்கங்களை முழுமையாக மறந்தது, நம்முடைய அன்றாட வாழ்வியல் நியதிகளை முழுமையாக மறந்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை நம்மீது சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு நாம் உணவை மறந்தோம், நல்ல உள்ளத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை மறந்தோம். மோகத்தில் திளைக்கக்கூடிய சூழல் இருப்பதனால் இன்று நம் உடல் நோயுற்று, மெலிவுற்று, உலகிலேயே பிணிவுற்ற ஒரு தேசமாக இந்தியா இருக்கிறது என்றால் கண்டிப்பாக நாம்தான் அதற்குக் காரணம்.ஆக உடற்பிணி நீங்கி நல்ல சிந்தனையோடு, உடல்நலத்தோடு வாழவேண்டும் என்றால் கண்டிப்பாக உணவில் கவனம் செலுத்த வேண்டும். இது மிக முக்கியமான ஒரு விசயம். இந்த உடம்பானது பஞ்சபூத கலவையால் ஆன அற்புதமான தேகம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று சொல்லக்கூடிய பஞ்சபூதங்களின் அடிப்படையில் இந்த உடம்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உடம்பை பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு சுவைகள் அவசியம். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு போன்ற ஆறு சுவைகளும்தான் நம் உடம்பை பேணி பாதுகாக்கக்கூடிய சுவைகள் என்று சொல்ல வேண்டும். ஆக நம்முடைய உணவு என்பது நம் உடம்பிற்குத் தேவையான சுவைகளின் அடிப்படையில் எப்பொழுது பட்டியலிடப்படுகிறதோ அப்பொழுதுதான் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேடி நாம் நகர முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.